உன்னாவ் வழக்கு - குல்தீப் செங்கர் ஜாமீன் நிறுத்திவைப்பு |

எழுத்தின் அளவு: அ+ அ-

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிஐ விசாரித்து வந்த இந்த வழக்கில், கடந்த 2019ம் ஆண்டு செங்காருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 

இதனிடையே, ஜாமீன் வழங்கக் கோரி செங்கார் தாக்கல் செய்த மனுவை கடந்த 23ம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு நிபந்தனை ஜாமீனும் வழங்கியது. செங்காரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி இந்தியா கேட் முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாயார் மற்றும் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்,  டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிறப்பு விடுமுறை மனுவை உச்சநீதிமன்றத்தில்  சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு,  குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. 

செங்காரை காவலில் இருந்து விடுவிக்க முடியாது என்றும் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். டெல்லி உயர்நீதிமன்றத்தின் இடைநிறுத்த உத்தரவில் கணிசமான சட்டக் கேள்விகள் எழுவதாக கூறிய நீதிபதிகள், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பாக செங்கார்  4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பினரும் மற்றும் மகளிர் அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Night
Day